Tuesday, 7 July 2009

நத்தைகள் - படிக்கவா இல்ல சாப்பிடவா

சொந்தமா வீடு வாங்கின புதுசில ஆர்வக்கோளாறுல தோட்டம் போடணும்னு ஆரம்பிச்சேன். நியூஸில இருந்த குளிருக்கு ஒண்ணும் சரிப்பட்டு வரலை. இருந்தாலும் விட்டுருவாமா? ரோட்டோரத்தில இருந்த மணத்தக்காளிப்பழத்தை கொண்டு வந்து பின்னாடி போட்டு காடு மாதிரி வந்தது. நல்லா பசுமையா வந்து சமைச்சும் சாப்பிட்டோம். (புதினா, நியூஸி பசலைக்கீரைன்னு , ரோஸ் செடின்னு எல்லாம் நல்லா வந்தது. அதையெல்லாம் விட்டுட்டு நாந்தான் ஆஸிக்கு வந்தாச்சு. )

ஆனா தோட்டத்துல ஒரு பிரச்சனை. நிறைய நத்தைகள் இலைக்குப்பின்னால வந்து ஒட்டிக்கும். இலையோட சாறை உறிஞ்சிடும். இலை ரெண்டே நாள்ல எலும்புக்கூடா கண்ணுக்குத்தெரியும். மழை பெஞ்சா எங்கிருந்துதான் எல்லா நத்தையும் கிளம்பி வருமோ. தோட்டம் பூராவும் மேயும். மைனா மாதிரி ஒரு வகைப்பறவைகள் வரும். வந்து நத்தைகள் ஓட்டை உடைச்சு நத்தையை தின்னும். இந்தப்பறவைகள வரவைக்கறதுக்காகவே மீதியாகற சோத்தை வெளியில வைக்கறது. இந்தப்பறவைகள் சாப்பாட்டையும் தின்னுட்டு நத்தையையும் கண்டு புடிச்சு தின்னுடும்.

நத்தையை கொல்லறதுக்கு ஒரு Garden Pellets போடுவேன். அதை தின்னுட்டு நிறைய நத்தைகள் செத்துப்போயிடும். ஆனா இப்படிப்பண்ணினா மண் கெட்டுப்போயிருமாம். நத்தையைக்கொல்ல விஷம் போட்டு மண்ணே விஷமா ஆனாலும் ஆயிடுமாம்.

அப்ப இதுக்கு என்னதான் வழி. ஒரு ஆஸ்திரேலிய அம்மணி சொல்றாங்க சமைச்சு சாப்பிடுங்கன்னு. அம்மணியோட வலைப்பதிவுக்குப்பேரு Eating Garden Snails . க்ளிக்கி போய்ப்பாருங்க. எப்படி சமைக்கறதுன்னு சமையல் குறிப்பு கூட தர்றாங்க. உவ்வேங்கறவங்க என்ன மாதிரி பெல்லெட்ஸ் போட்டு நத்தைகள கொன்னுருங்க.

இல்லாட்டி "நெடுஞ்சாலையைக்கடந்து செல்லும் நத்தை" அறிமுகம் படிங்க. பதிவுல அறிமுகப்படுத்தியிருக்க கவிதைகள் புரியுதுங்க. அதுதான் எனக்கு சந்தோஷம். (கவுஜக்கும் நமக்கும் ரொம்பத்தூரம்) இடங்கொடுத்தான் கவிதை சொல்லவர்றது புரியுதா. அடுத்த முறை இந்தியா போகும்போது வாங்கணும் இந்தப்புத்தகம்.

இந்த ஆஸ்திரேலிய அம்மணி ஒரு பதிவுல சொல்லறாங்க - "Organically grown food is more nutritious and better for us than that which is grown with a lot of pesticides and fertilizer. Wild food is even better. A handful of fresh chopped nettle tips gives a pasta sauce a really satisfying richness. They have much higher proportions of minerals than spinach, and higher protein content than meat.
If you can dry some too, you can use them through the winter.
Many other weeds are good to eat too."

மணத்தக்காளிச்செடியையே Weed னு ரங்கமணி பிடுங்கிபோட்ட கொடுமைய நான் எங்க போய் சொல்லறது.

Wednesday, 1 July 2009

ஐயய்யோ, ஆஸ்திரேலியாவா ?

இந்தியாவில் நிறையபேர் இப்படித்தான் அலர்ற மாதிரி தெரியிது. ஊடகங்கள் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதைபற்றி கொஞ்சம் அதிகப்படுத்தி எழுதுவது போலவே படுகிறது. அலுவலகத்தில இந்திய நண்பர்களும் வீட்டுக்கு தொலைபேசினா, வீட்டுல எல்லாரும் ரொம்ப பயந்து போய் உங்களுக்கு ஒண்ணும் ஆபத்தில்லயேன்னு பேசறதப்பத்தி சொன்னாங்க. தாக்குதல் பண்ணறவங்க யாரு? பொதுமக்கள் இல்ல, திருடர்கள் தான். அதிலும் பெரும்பாலும் பதினெட்டு வயதுக்குட்பட்டவங்கதான் இத பண்ணறது.

இப்ப ரெண்டு நாளா இந்தியால இருந்து ஆறு பத்திரிகையாளர்கள் வந்து என்ன நடக்குது ? காவல் துறை என்ன செய்யுதுன்னு பாக்க வந்திருக்காங்க. சரி நீ என்ன நினைக்கறேன்னு கேட்டீங்கன்னா , ஆஸ்திரேலியா ஒண்ணும் குற்றமே நடக்காத நாடு இல்லை. திருட்டு, கொலைன்னு எல்லாம் இந்தியா மாதிரி நடந்துட்டு தான் இருக்கு. இந்தியாவில இதெல்லாம் நமக்கு நடக்காம இருக்க என்ன செய்வமோ அதே மாதிரி தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்க வேண்டியதுதான். இன்றைக்கு இங்கு இருக்கும் பொருளாதார நிலையும் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்க காரணம் என்றும் சொல்லலாம்.

இப்ப ரெண்டு நாள் முன்னாடி , ரெண்டு மாணவர்கள் அடிபட்டாங்க. எங்கன்னு கேட்டீங்கன்னா Pubல, - பசங்க படிக்கற வகுப்புலயோ இல்ல தங்கியிருக்கிற வீட்லயோ இல்ல. அடிவாங்கின நேரம் அதிகாலை நான்கு மணி. பாவம் அவங்க அப்பா அம்மா. பசங்க கடல் கடந்து வேற நாட்டுக்குப்போய் கஷ்டப்பட்டு படிக்கறதா நினச்சுக்கிட்டு இருப்பாங்க.

இன்னொரு கேஸ்ல ராத்திரி பன்னெண்டு மணிக்கு ரயில்ல மாணவன் தனியா ரயில்ல பிரயாணம் செய்திருக்கான். அவன் மேல தாக்குதல். நீங்களே யோசிச்சுப்பாருங்க. படிக்கற வயசுல இந்த மாதிரி நேரங்கள்ல உங்க வீட்டுல உங்கள வெளிய போக விடுவாங்களா?.

இன்னொரு தாக்குதல் நடத்தியது ஒரு வெள்ளையரும் ஒரு ஆப்பிரிக்க கருப்பரும். இதுல இனவெறி எங்கே இருந்து வந்ததுன்னு தெரியலை. அவங்க ரெண்டு பேரும் கூட்டு போட்டு Brown நிற இந்தியர்களை போட்டுத்தள்ளறாங்கன்னு வேணும்னா வச்சிக்கலாம்.


எங்கள மாதிரி வேலைக்குபோறவங்க எப்படா வீட்டுக்கு வந்து , அக்கடான்னு இருப்போம்னு நினைபோம். நாங்க பிரயாணம் செய்யறதெல்லாம் பீக் அவர்லதான். நிறைய நெரம் நிக்கவே ரயில்ல இடம் இருக்காது. அந்த நேரங்கள்ல எல்லாம் ஒரு தாக்குதலும் இல்லை. பயமும் இல்லை.

சீன மாணவர்கள் இந்திய மாணவர்கள் மாதிரி தனியா பிரயாணம் போயி மாட்டிக்கறதில்ல. எப்பயும் நாலு அஞ்சு பேராதான் போவாங்க.

சரி. இவ்வளவு நடக்குதே. ஆஸ்திரேலியக்காவல்துறை என்ன பண்ணுதுன்னு கேட்டீங்கன்னா, அவங்களால முடிஞ்சதப்பண்ணறாங்க. 'Students are easy Targets' அப்படீங்கறாங்க. மாணவர்கள் தாக்கப்பட்ட நேரம் பாத்தீங்கன்னா, ரவுடிகள் , குடிகாரங்க சுத்தற நேரம். தனியாப்போகாம கூட்டா பயணம் செய்யுங்கன்னு சொல்லறாங்க. அப்பப்ப Police Patrol போடறாங்க. மெல்பர்ண்ல இத்தாலிய அண்டர்க்ரௌண்ட் மாபியா இருக்காங்க. Drugs ஒரு பெரிய பிரச்சனையா இருக்கு. இவங்க நடவடிக்கைகள கட்டுப்படுத்தறது பெரிய வேலை காவல்துறைக்கு. காவல்துறையும் நிறையபேரை ரயில்நிலையங்களில் பாரா போடப்போவதாக சொல்லியிருக்கிறது. இரவிலும் குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கலாம்.

தொலைக்காட்சில பெர்த் நகரத்துல நடந்த நிகழ்ச்சி சமீபத்தில காட்டினாங்க. மூணு இந்திய மாணவர்கள் குளிர்சாதனப்பெட்டி(Second Hand) வாங்கினாங்க. கார்ல ஒரு தொடர் வண்டி கட்டி(Trailor) அதில பெட்டிய வைச்சு, ஒரு மாணவன் நின்னு பெட்டி கீழ விழாம பிடிச்சுக்கிட்டே பிரயாணம் பண்ணினாங்க. போலீஸ் புடிச்சு நிறுத்தினாங்க. சாதாரணமா இந்த விதிமீறலுக்கு $500.00 கூட அபராதம் போடுவாங்க. மாணவர்கள்னு தெரிஞ்சுகிட்டு, அம்பது டாலர் குளிர்சாதனப்பெட்டிக்கு ஐநூறு டாலர் அபராதம் போடறது சரியில்லன்னுட்டு அந்த தொடர் வண்டியில குளிர்சாதனப்பெட்டிய கட்டறதுக்கு நல்ல கயிறு வாங்கிக்குடுத்தாங்க. காவல் துறை செலவில. இங்கெல்லாம் இப்படி பயணம் செய்யாதீங்கப்பான்னு சொன்னாங்க. இதெல்லாம் நம்ம பத்திரிக்கைல வர வாய்ப்பே இல்லை.

ஒருசில மாணவர்கள் படிக்கற கோர்ஸ் பாத்தீங்கன்னா , இந்தியால இல்லாத கோர்ஸ் இல்லை. Hospitality and Hotel Management - Catering இப்படிப்பட்ட வகுப்புகள் தான் அவங்க படிக்கறது. நண்பர்கள் கிட்ட பேசினப்ப அவங்க நகைச்சுவைக்காக சொன்னது இது," இந்தக்கோர்ஸ் படிக்க ஏன் வெளிநாடு போகணும் தெரியுமா, வெளிநாட்டுல படிச்ச பெருமையும் ஆச்சு, பின்னாடி கல்யாணம் செய்துக்கும்போது வரதட்சிணையும் அதிகமா வாங்கலாம்".
ஒருவேளை உண்மையாக்கூட இருக்குமோ? பாத்தீங்கன்னா பெரும்பாலும் ஆண்கள்தான் இங்க வந்து படிக்கறது. பெண்கள் ரொம்பக்கம்மி.

அது போகட்டும். விக்டோரியா மாகாணத்துல Swine Flu எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. அதுக்கு யார் காரணம்னு கண்டுபுடிச்சாச்சு. கீழ படத்தில இருக்கறவர்தான்.







Monday, 29 June 2009

உயில் - மழலை

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த தீ விபத்தில் நிறையப்பேர் உயிரிழந்தனர். அதில் இறந்தவர்களில் ஒரு பணக்காரத்தம்பதியரும் அடக்கம். அவர்கள் உயிலில் தங்களது வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் தங்களது சொத்தில் எந்தப்பங்கும் சேரக்கூடாது என்று எழுதி வைத்திருக்கின்றனர் என்பது பின்னர் தெரிய வந்தது. அந்த வாரிசு சொத்தில் பங்கு கேட்டு நீதி மன்றம் போகப்போவதாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். அதைத்தொடர்ந்து எழுந்த கேள்விகள்.

1. பெற்றொர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த குழந்தை என்று சலுகைகள் காமிப்பது வழக்கம். அவர்கள் இறந்த பின்னும் உயில் போன்றவைகளில் இதை அவர்கள் தொடர வேண்டுமா?

2. ஒரு வாரிசுக்கு சொத்து சேரவே கூடாது என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலையில், எதுவும் கிடைக்காத வாரிசு இப்படி நீதி மன்றம் போகிறார். நீதிபதியும் இவருக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி விடுகிறார். இது இறந்தவர்களுக்கு அநீதியா இல்லையா?

3. ஒரு வேளை பெற்றவர்கள் இறப்பதற்கு முன் உயிலை மாற்றவேண்டும் என்று நினைத்து, மாற்றுவதற்கு முன் இறந்து விட்டால், ஒரு வாரிசுக்கு இழைக்கப்பட இருந்த அநீதி சரி செய்யப்பட்டதாகத்தானே அர்த்தம்.

4. பெற்றொருக்கு எதுவும் செய்யாத கெட்ட பிள்ளையாக இருந்தாலும், பெற்றோர் மற்ற குழந்தைகளைப்போலவே சரிசமமாக சொத்தில் பங்கு தருவதாக வைத்துக்கொள்வோம். பெற்றொர் இறந்த பின் தன்னையும் மற்ற குழந்தைகளைப்போலவே நடத்தியுள்ளைதக்கண்டு , கெட்ட பிள்ளை திருந்த வாய்ப்பு உண்டா இல்லையா?

5. தாம்(வாரிசுகள்) உழைத்து சம்பாதிக்காத பணத்திற்காக வாரிசுகள் சண்டை போட்டுக்கொள்ளும் நிலைமையில் பெற்றொர் அவர்களை விட்டுச்செல்வது சரியா.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

--------- xxxx ----------

ஆஸ்திரேலியாவில் பணிக்குச்செல்லும் நிமித்தம் தினமும் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகிறது. காலையில் பெரும்பாலும் இந்தியாவின் வேலை நேரம் போல்தான் இங்கும் ரயிலில் கூட்டம். ஆஸ்திரேலியாவில் இந்தப்பிரயாணங்கள் பெரும்பாலும் இந்தியாவில் வேலைக்குப்போகும் நாட்களை ஞாபகப்படுத்துகின்றன. ஆனாலும் பெரும்பாலும் MP3 Player, Ipod கேட்டுக்கொண்டுதான் ரயிலில் எல்லாரும் வேலைக்குச்செல்கிறார்கள். கொஞ்சப்பேர் ஏதாவது புத்தகம், செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம்பேர் தான் பேசிக்கொண்டு இருப்பவர்கள்.

எல்லா நேரமும் இப்படி ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருநாள் ஒரு இளம்வயது அம்மாவும் அவரது நான்கரை வயது மகனும் எனக்கு எதிரில் அமர்ந்திருந்தார்கள். சிறுவன் ஏதோ கேள்விகளைக்கேட்டுக்கொண்டும் கண்களை மூடிக்கொண்டு
"It dark now" என்று விளையாடிக்கொண்டு இருந்தான்.
ரயில் நிலத்தடி Tunnel க்குள் நுழைந்தது. கண்களை மூடித்திறந்தவன்
"Mum, Its not dark if I close my eyes"என்றான். அதற்கு அம்மா " Because it dark outside"
மகன்: No Mummy, Its Sunny outside
அம்மா: Its Sunny Outside, but dark inside the tunnel.
மகன்: Oh! Its Summer Outside - Winter inside the Tunnel.
Its Summer Outside - Winter inside the Tunnel
என்றான். அருகில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாருக்கும் சிரிப்பு.

ஒருவர் தனக்கும் நான்கு வயது மகன் இருப்பதாக சிறுவனிடம் சொன்னார். அவனுக்கு மைக் என்று பெயர் என்றார்.
சிறுவன் "Does Mike have more Toys than me".
அவர் சிரித்துக்கொண்டே 'possibly' என்றார். சிறுவனின் அம்மா ' May be' என்றார்.அந்தப்பதில்களில் திருப்தி அடைந்தவ‌னாய் ஓ என்றான்.
அம்மா பிறகு பேச்சை மாற்ற A for என்றதும் "Jayden" என்றான். அது உன் பெயர். "J for Jayden".பள்ளியைப்பற்றி ஞாபகப்படுத்தியதும் 'I am going to marry Poppy". (நம் ஊர் அம்மாக்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்).
Poppy is a sweet girl in his class. Jay, What did Poppy's mum said? You have to finish School and then marry her"

சிறுவனுக்கு பயம் வந்து விட்டது.
"No . I dont want to go to School. I want to marry Poppy."

இப்படியாக ஒரு அரை மணிநேரம் அந்தப்பெட்டியில் அந்தச்சிறுவனுடைய பேச்சை ரசித்துக்கொண்டே எல்லாருக்கும் நன்றாகப்பொழுது போயிற்று.

சந்தனமுல்லையும் பப்புவும் ஞாபகத்துக்கு வந்தார்கள். இப்படி என்ன விஷயம் நடந்தாலும் பதிவுலகத்தில் உள்ளவர்கள் ஞாபகம் வந்துவிடுகிறது.

-----xxxxxxxxx-------

Monday, 30 March 2009

என்னை ஞாபகம் இருக்கா!!!!!

இந்த முறை இந்தியாவுக்குப்போனப்பவும் ஒருத்தர் இந்தக்கேள்வியைக்கேட்டார். ஒவ்வொரு தரமும் யாராவது என் கிட்ட கேட்டுடுவாங்க. "செந்திலண்ணாதானே"ன்னு நானும் கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்டேன் அவரை. கிட்டத்தட்ட இருபது வருசம் கழிச்சு என்னை பாக்கறார். அவரும் நானும் அடையாளம் கண்டுக்கிட்டது எனக்கே அதிசயமாப்பட்டுது. அவங்கப்பா எங்க ஊர் பஸ்ல ஓட்டுனரா இருந்தார். அதனால அவரை எல்லாருக்கும் தெரியும். இந்த அண்ணா வடக்கே எங்கியோ வேலைல இருந்தார். இப்ப கோவைலயே செட்டில் ஆகிட்டார்.



என் ஒன்று விட்ட சித்தியின் மகன் என்னை வந்து பார்த்தான். அவனையும் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். இப்பொழுது அவனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. நேவியில் பதினைந்து வருடம் பணியாற்றி விட்டு இப்போது P & O Cruise கப்பலில் பாதுகாப்பு வேலையில் இருக்கிறான். பால்ய வயது சம்பவங்களை நினைவு கூர்ந்தோம்.

'அக்கா, அந்த மாதிரி வாழ்க்கை இனி வராது இல்லையா' என்றான்.



ஒருத்தங்களை நான் சந்திக்க தோதுப்படவில்லை. இவங்களை என் கோலங்கள் கதையின் கதாநாயகின்னு சொல்லலாம். புற்றுநோய் மூளைக்கு பரவிவிட்டதாம். மருத்துவனைக்கும் வீட்டுக்குமாய் இருக்கிறார்களாம். மருத்துவர்கள் கை விட்டுவிட்டனர். போய்ப்பார்க்க முடியவில்லை என்று இன்னும் மனதில் ஒரு அரிப்பு. இப்பொழுதுதான் வாழ்க்கையில் ஒரளவுசெட்டில் ஆகியிருந்தார்கள். அதற்குள் இப்படி வந்திருக்கிறது.



இந்தியாவில் ஆறு வாரங்களில் 5 வாரங்கள் இணையம் இல்லை. வீட்டில் மோடம் என்னவோ ரிப்பேர். அதை சரிபார்க்க so called experts வந்து இருமுறை முயற்சி செய்து தோற்றுப்போனார்கள். கடைசியில் BSNL compatible மோடம் ஒண்ணு வாங்கி கன்பிகர் பண்ணி மாட்டியதும் சரியாச்சு. எப்பன்னா நான் கிளம்பறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி.



இப்ப கோவைக்கு வெளிநாட்டு விமான சேவை இருக்கறது ரொம்ப வசதியா இருக்கு. திரும்ப மெல்பர்ன் வரும்போது விமானத்துக்காக காத்துட்டு இருந்தொம். போர்டிங் போகப்போன போது ஐந்து அதிகாரிகள் ஒருவரை நிறுத்தி விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். இங்கு வந்ததும் தான் வீட்டில் சொன்னார்கள். நீ போன அதே பிளைட்டில் ஒருத்தர போதைப்பொருள் கடத்தினதா பிடிச்சிருக்காங்க என்று.



தொழிலதிபர் சஞ்சயிடம் மட்டும் போனில் பேச முடிந்தது. நேரில் பார்க்க முடியவில்லை. அவரும் பிஸி. நானும் தான்.



இங்கே வந்ததும் மறுநாள் வேலைக்குப்போகணும். இருந்த அலுப்பில் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். இப்போ மூணு நாளா காய்ச்சல். இன்னைக்குதான் கொஞ்சம் பரவாயில்லை. எல்லா பதிவுகளையும் தமிழ்மணத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் படித்துக்கொண்டிருக்கிறேன்.



பழமைபேசி மலங்க மலங்க நல்லா முழிச்சிருக்கார்.



துளசி டீச்சர் எனக்கு வசதியா லீவு போட்டுட்டாங்க.



தளபதி நசரேயன் ரயில்ல மஞ்சளழகிக்கு அண்ணனான கதை சூப்பர்.



தாமிரா - ஆதிமூலகிருஷ்ணன் ஆகிட்டார். எனக்குத்தெரிஞ்சு இவரோட சேத்து பதிவுலகத்துல மூணு கிருஷ்ணர்கள். யுவ கிருஷ்ணா, பரிசல் மத்தவங்க.(சுதேசமித்திரனை சந்திச்சேங்க ஆதிமூலகிருஷ்ணன்)



கார்க்கி ஸ்டார் ஆனதுக்கு வாழ்த்துக்கள். தாமிரா என்ற ஆதிமூல கிருஷ்ணனுக்கும் வாழ்த்துக்கள். மாதவராஜ் அவர்கள் பதிவுகள் எல்லாம் அருமை.



குசும்பன் அடுத்த நட்சத்திரமாம். அன்னன்னைக்கு படிக்காட்டியும் தேடிப்பிடிச்சு படிக்கும் பதிவுகள்ல ஒண்ணு குசும்பருடையது.



------- ----------



அப்பப்போ பதிவு போட்டு நானும் இருக்கேன்னு சொல்லிக்கணும். இல்லாட்டி நானும் என்னை ஞாபகம் இருக்கான்னு உங்க கிட்ட கேக்க வேண்டி வருமே :)

Saturday, 31 January 2009

வெந்து தணிந்தது

மெல்பர்னில் தொடர்ந்து மூன்று நாட்களாக 43 டிகிரிக்கும் மேலாக வெய்யில். கடும் வெய்யில் காரணமாக ரயில்கள் ரத்து. தண்டவாளங்களில் விரிசல். தீயால் 10 வீடுகள் எரிந்து போயின. பலரும் ஏர் கண்டிஷன் போட்டதால் லோட் தாங்காமல் ட்ரான்ஸ்பார்மர் பழுதானதில் பலருக்கு மின்சாரம் போனது. ஒரே நாளில் சரி செய்யப்பட்டாலும் இதில் கஷ்டப்பட்டவர்கள் வயதானவர்கள்தான்.

வெள்ளி மதியம் 45.1 டிகிரி வெப்பம் இருந்தது. வெய்யில் தாங்க முடியாமல்
குறைந்தது ஆறு பேர் இறந்து போனார்கள்.


Melbourne again endured a top temperature above 43 degrees, marking the first time since records began in 1855 that the city notched up three consecutive days so hot.

-----

வெய்யில் தாங்கமுடியவில்லை எனும் போது தான் முத்துக்குமரன் தீக்குளித்த செய்தியும் படிக்க நேர்ந்தது. தீக்குளித்த முத்துக்குமரன் எவ்வளவு வெம்மை தாங்கியிருக்கிறார். தற்கொலை சரியல்லதான் என்றாலும் அரசியல்வாதிகள் இதன்மூலமாவது ஏதாவது செய்யமாட்டார்களா என்ற எண்ணமே அவருக்கு மிஞ்சியிருந்திருக்க வேண்டும். தற்கொலையை விடுத்து நீங்கள் வேறு ஏதாவது செய்திருக்கலாமே முத்துக்குமரன் :(

ஈழமக்கள் படும் வெம்மை எப்போது தணியும்?

முத்துக்குமரன் எழுதியிருக்கும் கடைசிக்கடிதம் இங்கே படியுங்கள்

Sunday, 25 January 2009

ஒட்டுண்ணி மாலதி





எங்க கல்லூரியில் பத்து நாள் உல்லாசப்பயணம் அழைத்துப்போகிறார்கள். பெட்டியில் துணியெல்லாம் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தேன். எதாவது விட்டுப்போகிறதா என்று சரிபார்த்துக்கொண்டிருந்தேன். எதிர் வீட்டுக்கதவு திறப்பது தெரிந்தது. "அம்மா , எதிர் வீட்டு ஒட்டுண்ணி மாலதி ஸ்கூல்ல இருந்து வந்தாச்சா. நான் டூர் போறது தெரிஞ்சா நானும் வரேன்னு ஒட்டிக்கும்" என்றேன்.
"இல்லடி. இன்னும் வரலை" என்றார்கள் அம்மா.

எதிர் வீட்டு மாலதி மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். மாலதி குடும்பம் எதிர் வீட்டுக்கு குடி வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. மாலதிக்கு எங்கள் வீட்டுக்கு தினமும் வராவிட்டால் மண்டை வெடித்துவிடும். எங்கள் வீட்டில் என்ன நடந்தாலும் மூக்கை நுழைப்பாள். என் அண்ணன் மாதமொரு முறையாவது ஆபீஸ் டூர் போவான். ஒட்டுண்ணி மாலதி நானும் வருவேன் என்று அழுது அடம் பிடிப்பாள். இது உல்லாசப்பயணம் இல்லை. ஆபீஸ் வேலை என்றால் என்னவோ அவளுக்குப்புரியாது. அவள் அம்மா வந்து அடித்து இழுத்துப்போவார்கள்.



மாலதிக்கு இரண்டு அண்ணன்கள். அவளை விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தனக்குத்தான் முன்னுரிமை வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அதனாலேயே சண்டை வரும். மாலதியின் அண்ணன்களுக்கு ரஜினி ரொம்பப்பிடிக்கும். எப்பொழுதும் ரஜினி பட பாட்டும் வசனமுமாக இருப்பார்கள். மாலதி மட்டும் சும்மாவா .

எங்கள் வீட்டுக்கு வந்து கதவு ஜன்னல் எல்லாம் மூடுங்கள் என்பாள். என் அண்ணா டீ. வீ. பார்த்துக்கொண்டிருப்பான். டீ வி யை நிறுத்தச்சொல்லிவிட்டு

" வந்தேண்டா பால்காரன் அடடா பசு மாட்டைக்கட்டி ஆடப்போறேன்" பாட்டு முழுவதும் பாடிக்கொண்டே ஆடிக்காட்டுவாள். கதவு ஜன்னல் எல்லாம் மூடாவிட்டால் அவள் அண்ணன்கள் பார்த்து கேலி செய்வார்களாம். எத்தனை தரம் தான் இந்த ரஜினி பாட்டு கேட்பது. எங்களுக்கு சலித்துவிடும். போடி நீ உங்க வீட்டுக்கு என்றால் ஏங்க்கா என்னை வெறுக்கறீங்க என்று கேட்பாள். 'Give us some space' என்று எப்படி அவளுக்கு புரிய வைப்பது. என் அண்ணன் டீ வி யை நிறுத்த மாட்டேன் என்றால் அப்பா மாலதிக்கு பரிந்து கொண்டு வருவார் குழந்தைதானே என்று. எப்படியும் நானும் அண்ணனும் டீ வி பார்க்க முடியாது போகும் மாலைகள் எத்தனையோ.

ஒட்டுண்ணி மாலதி வருவதற்குள் என்னை என் தோழியின் வீட்டில் கொண்டுபோய் என் அப்பா விடுகிறேன் என்று சொல்லியிருந்தார். அங்கிருந்து கல்லூரிக்கு உல்லாசப்பயணத்துக்கு நான் தோழியுடன் போவதாக ஏற்பாடு. சரியாக பெட்டியை கொண்டு போகவும் ஒட்டுண்ணி மாலதி பள்ளி விட்டு வேனில் வரவும் சரியாக இருந்தது.


"எங்கக்கா போறீங்க என்னை விட்டுட்டு" என்றாள்.


"எனக்கு பரீட்சை வருது. மெட்ராஸுக்குப்போறேன் பரீட்சை எழுத " என்று பொய் சொன்னேன். அதற்குள் மாலதியின் அம்மா வந்து என்னை போக சொல்லி சைகை காட்டி அவளை வீட்டுப்பாடம் எழுதிட்டு அக்காவை எல்லா கேள்வியும் கேள் என்று கண்டித்து அழைத்துப்போனார்கள்.


பத்து நாள் நன்கு ஆட்டம் போட்டு வீட்டுக்கு வந்தேன். ஒட்டுண்ணி மாலதிக்கு தெரியாமல் போட்டோ எல்லாம் மறைத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏங்க்கா என்னை கூட்டிட்டுப்போகலை என்பாள். என்னை வீட்டுக்கு அழைத்துப்போக வந்த அண்ணன் கொஞ்சம் என்னவோ போல இருப்பது போல் இருந்தது.


வீதிக்கு வந்த போது, மாலதியின் வீட்டில் பந்தல் போட்டிருந்தது. என்ன என்றேன். வீட்டுக்கு வா எல்லாம் சொல்றேன் என்றான். அம்மா வாசலில் இருந்தார்கள். என்னைப்பார்த்ததும் ஒட்டுண்ணி மாலதி நம்மை விட்டு போயிட்டாடி என்றார்கள். நான் டூர் கிளம்பிய இரண்டாம் நாள் மாலதியின் அண்ணன்கள் நான்கு நான்கு மாடிப்படிகளாக தாண்டி விளையாடி இருக்கிறார்கள். இவளும் தாண்டி விளையாடிய போது தவறி விழுந்து தலையில் அடி பட்டதில் இரண்டு நாட்கள் கோமாவில் இருந்து இறந்து விட்டாளாம்.


எனக்கு சொன்னால் உல்லாசப்பயணம் நன்றாக அனுபவிக்க முடியாது என்று எனக்கு சொல்லவில்லை. நேராய் அம்மாவும் நானும் மாலதி வீட்டுக்குப்போனோம். மாலதியின் அம்மா என் கையைப்பிடித்துக்கொண்டு அழுதார்கள்.

"நீ இருந்திருந்தா அவ உங்க வீட்டுக்குத்தான் வந்திருப்பா. ஒருவேளை செத்துப்போயிருக்க மாட்டாளோ, என்னவோ விதி" என்றார்கள் ஆற்றாமையுடன்.

வீ்ட்டுக்கு வந்த போது எனக்கு டூர் போன சந்தோஷம் எதுவும் இல்லை. நான் மாலதியிடம் கடைசியாக சொன்னது ஒரு பொய்.பரீட்சை எழுதப்போகிறேன் என்று. மனதை உறுத்தியது. இரவு சாப்பாடு சாப்பிட அம்மா அழைத்தார்கள். சாப்பிட முடியவில்லை. அண்ணனும் சரியாக சாப்பிடவில்லை. வீடே அமைதியாக இருந்தது. யாராச்சும் பேசுங்க. இல்லாட்டி நான் டீவி போடறேன் என்று அண்ணன் டீ வி போட்டான்.

'வந்தேண்டா பால்காரன் அடடா பசு மாட்டப்பத்தி பாடப்போறேன்" பாட்டுக்கு ரஜினி ஆடிக்கொண்டிருந்தார். பட்டென்று டீ வி யை நிறுத்தி விட்டு கலங்கிய கண்களுடன் அண்ணன் சொன்னான்.

"இந்த ஒட்டுண்ணி மாலதி உயிரோட இருந்தப்பவும் டீவி பாக்க விடமாட்டா, இப்பவும் பாக்க விடமாட்டேங்கிறா"







Monday, 12 January 2009

தமிழ்மணம் விருதுகள்

தமிழ்மணம் -அவார்ட்ஸ் போட்டிக்கு என் பங்களிப்பு



நல்ல தாயார் சிறுகதையும் போட்டியிடுகிறது. நான் எழுதிய முதல் சிறுகதை. படித்தவர்களுக்கும் பிடித்திருந்தது. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். படித்துப்பார்த்து பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள். (கதை கவிதை பிரிவு)



தவறுகள் திருத்தப்படலாம் - இளவயதில் இளசுகள் செய்த தவறூகள் பெரியோரால் திருத்தப்படலாம். இதையும் படித்துபிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள். அனுபவங்கள்/நினைவோடைகள்



மணலாலும் பனியாலும் ஆன வீடு - திரைப்பட அறிமுகம்/திறனாய்வு